
வாழப்பாடி:வாழப்பாடி பகுதியில், தேங்காய் உற்பத்தி குறைந்த நிலையில், வடமாநிலங்களிலிருந்து குவியும் ஆர்டரால்,விலை உயர்ந்தது.சேலம் மாவட்டம் வாழப்பாடிபகுதியில் இருந்து, ஆண்டு முழுவதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதியாகிறது.தென்னை மரங்களை குத்தகைக்கு பிடித்து அறுவடை செய்தும், எண்ணிக்கை அடிப்படையிலும் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் மண்டி அதிபர்கள் தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர்.முதல் தர தேங்காய்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி,ராஜஸ்தான், குஜராத்,மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம்,பீகார்,மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களுக்கும், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.இந்தாண்டு போதிய மழையில்லாததால், விளைச்சல் குறைந்தது.அதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தும், வடமாநிலங்களில் இருந்து தேங்காய் ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிகிறது.இரு மாதங்களுக்கு முன் வரை 1,000 தேங்காய்களுக்கு அதிகபட்சமாக 3,000 முதல் 3,500 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்த வியாபாரிகள், தற்போது 5,000 ரூபாய் வரை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.இதையடுத்து, சில்லறை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் ஒரு தேங்காயை எட்டு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். அதனால் தேங்காய் விளையும் பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விளைச்சல் குறைவால் கவலையடைந்த தென்னை விவசாயிகளுக்கு, தேங்காய் விலை உயர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் போதிய மழை பெய்தால், எதிர் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் விளைச்சல் அதிகரித்து, தேய்காய் விலை குறையலாம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.